தமிழகம் முழுவதும் ரூ.2,000 நிவாரணம், 14 வகை மளிகை பொருட்கள் விநியோகம்: உற்சாகத்துடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்..!!

சென்னை: ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகை பொருட்களும் கொரோனா நிவாரணமாக 2வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி முதல் தவணையாக கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 

இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் பணத்தோடு 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தென்சென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். 

ரேஷன் குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு 2,000 ரூபாய் பணத்தோடு கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம்பருப்பு, புளி, மஞ்சள் தூள், மிளகாய்தூள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களும் வழங்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் 2,000 ரூபாய் பணத்தோடு மளிகை பொருட்களும் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

டோக்கனில் குறிப்பிட்டிருக்கும் தேதி, நேரத்தின் படி பொதுமக்கள் அவசரமின்றி நிவாரண நிதியையும், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தினமும் 100 பேருக்கு என இம்மாத இறுதி வரை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. 

Related Stories:

>