தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் கொரோனா 3வது அலை வரும் என உலக நாடுகள் அச்சம்: சிகிச்சை அளித்தால் கருப்பு பூஞ்சையில் இருந்து தப்பலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கொரோனா 3வது அலை வரும் என்று உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. எனவே, பொதுமக்கள் தொடர்ந்து கை கழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைக்கபிடித்தல் போன்ற வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.   சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் 20 லட்சம் மதிப்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை  முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம்  செய்து முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர்  மணி, ரத்த வங்கி அலுவலர்  டாக்டர் தமிழ்மணி உட்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 54 ஆயிரத்து 171 படுக்கைகள் காலியாக இருக்கிறது. சென்னை உள்பட 27 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது.  2 மேற்கு மாவட்டங்களில் தான் ஆயிரத்துக்கும் மேல் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. உலக நாடுகள் கொரோனா 3-வது அலை வருமோ என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. ஒரு சில நாடுகளில் 3-வது அலை எட்டி பார்க்கவும் தொடங்கி உள்ளது. அதனால் பொதுமக்கள் தொடர்ந்து கை கழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைக்கபிடித்தல் போன்ற வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை 1,493 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 77 பேர் குணமடைந்துள்ளனர். கருப்பு பூஞ்சை தொடர்பாக ஆரம்ப நிலையில் அறிகுறி தென்படுகிற போதே மருத்துவமனையை நாடினால் நிச்சயம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பலாம்.

கருப்பு பூஞ்சைக்காக நியமிக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழு ஓரிரு நாளில் அதற்கான அறிக்கையை தயார் செய்ய இருக்கிறார்கள். தமிழகத்தில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 970 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இந்திய அளவில் ரத்த தானம் வழங்குபவர்கள் என்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் 5 இடங்களில் உள்ளது. கடந்த 2006-2011ம் ஆண்டில் இந்தியாவில் 2வது இடத்தில் தமிழகம் இருந்தது. தமிழகத்தில் மொத்தம் 309 ரத்த மையங்களில் ரத்த சேமிப்பு என்பது தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை நான் 60க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்துள்ளேன். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னால் ரத்த தானம் செய்வதில் எந்தவித தடையும் இல்லை. அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 15 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories:

>