சிமென்ட், கம்பி விலையை கட்டுப்படுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: கொரோனா பெருந்தொற்று, நடுத்தர எளிய மக்களின் பொருளாதாரத்தை சூறையாடி இருக்கிறது. இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம் அதிர்ச்சி தருகிறது. சில்லரை விற்பனையில் 410 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட் தற்போது ரூ.470 - 520 ஆக அதிகரித்துள்ளது. இரும்புக் கம்பி ஒரு கிலோ ரூ.60 லிருந்து ரூ. 70 - 75 ஆகவும், ரூபாய் 3600க்கு விற்கப்பட்ட எம்-சாண்ட் ஒரு யூனிட் 4000 ரூபாய் ஆகவும், ரூ.4600க்கு விற்பனையான  வி-சாண்ட் ஒரு யூனிட் ரூ.5100 ஆகவும் உயர்ந்துள்ளது.

23 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லோடு செங்கல் 28 ஆயிரம் ரூபாயாகவும், 3 யூனிட் கருங்கல் ஜல்லி ரூ. 8500 லிருந்து ரூ. 9500 ஆகவும் அதிகரித்துவிட்டன. சிமென்ட், கம்பி தயாரிப்பு நிறுவனங்களின் விலை நிர்ணயத்தை தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தி கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: