இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது நேதன்யாகு ஆட்சி: புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு

ஜெருசலேம்: இஸ்ரேலில் புதிய பிரதமராக நெஃப்டாலி பென்னட் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் நெதன்யாகுவின் 12 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. இஸ்ரேலில் கடந்த 2009ம் ஆண்டு முதல் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 30 இடங்களில் வென்றது. தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, அங்குள்ள 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அதன்படி 8 கட்சிகள் கூட்டணி ஒன்றிணைந்து பெரும்பான்மை எண்ணிக்கையை தொட்டன.

இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி தொடரும் என்றும், முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தலி-பென்னட் (49), பிரதமர் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தலி பென்னட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 9 பெண்கள் உட்பட 27 பேர் இடம்பெற்று உள்ளனர். இஸ்ரேலில் நப்தலி பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

Related Stories: