ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின்சார ரயில் சேவை 343 ஆக அதிகரிப்பு: ஞாயிற்றுக்கிழமை 98 ரயில்கள் இயக்கம்; சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை: ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மின்சார ரயில்கள் 343 ஆக அதிகரித்து இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள் பயணிக்கும் வகையில் ஆரம்பத்தில் 151 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், கடந்த 7ம் தேதி 279 மின்சார ரயில்கள் இயக்ககப்பட்டன.  தற்போது, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக இன்று முதல் மின்சார ரயில்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்து இயக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி இடையே 56 ரயில்களும், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி-மூர்மார்க்கெட் மார்க்கத்தில் 57 மின்சார ரயில்களும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 30 ரயில்களும், சூலூர் பேட்டை, கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் இடையே 30 ரயில்களும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 18 ரயில்களும், வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே 18 ரயில்களும், சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 60 ரயில்களும் இயக்கப்படும். இதேபோல், மறுமார்க்கமாக திருமால்பூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை இடையே 60 ரயில்களும், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி- ஆவடி சைட்டிங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில்களும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்- பட்டாபிராம் மார்க்கத்தில் 10 மின்சார ரயில்களும் என 343 மின்சார ரயில்கள் இயக்கப்படும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில்  98 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: