கோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு

சென்னை: கோவிட் தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கு பூஜ்ய வரி தான் விதிக்க வேண்டும். அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்று தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது ஜி.எஸ்.டி சலுகை/வரிவிலக்கு அளிப்பதற்காக, வரிவிகிதங்களை பரிசீலித்து உரிய பரிந்துரைகள் வழங்க மேகாலயா துணை முதல்வர் தலைமையில் குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கேரளா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்று ஜி.எஸ்.டி மன்றத்தால் அமைக்கப்பட்டது.அக்குழு அளித்த அறிக்கையின் மீது விவாதித்து முடிவு எடுப்பதற்காக  44வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டமானது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை  அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் கலந்துகொண்டார். கூட்டத்தில், அமைச்சர்கள் அடங்கிய குழு எடுத்துரைத்த முக்கிய பரிந்துரைகள்: தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீது பூஜ்ய விகிதம் / 0.1 சதவிகிதம் வரி குழுவினால் பரிந்துரைக்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்தில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசியதாவது: கோவிட் பெருந்தொற்று தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய விகித வரி தான் நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரை ஏற்புடையதாக இல்லை. இவற்றின் மீது பூஜ்ய விகிதம் அல்லது 0.1 சதவிகிதம் வரி தான் விதித்திட வேண்டும்.

மேலும், கோவிட் சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தினை முடிவு செய்வதை கருணையுடன் அணுகவேண்டும். இவ்வாறு கூறினார். மேலும், இக்கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் ஆம்புலன்ஸ் மீதான வரியினை 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைப்பதென முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைப்பு/வரி விலக்கானது 30.9.2021 வரை வழங்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்க குழு மறுப்பு

கோவிட் தடுப்பூசிகள், ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள், ஆர்.என்.ஏ. எக்ஸ்ட்ராக்‌ஷன் கருவிகள், ஜீனோம் சீக்வென்சிங் கருவிகள், ஜீனோம் சீக்வென்சிங் கிட்ஸ், கோவிட் சோதனை செய்யும் கருவிகளுக்கான மூலப்பொருட்கள்,  பீ.பீ.ஈ கிட்ஸ், என் 95, மூன்று அடுக்கு அறுவை சிகிச்சை முகக் கவசங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் போர்ட்டபிள் மருத்துவமனை யூனிட்ஸ் ஆகியவை மீது வரிவிகிதம் குறைப்பதற்கு இக்குழு பரிந்துரை ஏதும் செய்யவில்லை.

Related Stories: