மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லி: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா தொற்று, கருப்புப் பூஞ்சை பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருந்துகள் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை நீக்குவது தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் 44-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டா், கை சுத்திகரிப்பான், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை ரத்து செய்வது தொடா்பாக ஆய்வு செய்வதற்கு மாநில நிதியமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.அக்குழுவுக்கு மேகாலய நிதியமைச்சா் கான்ராட் சங்மா தலைமை வகித்தாா். அக்குழுவில் கேரளம், உத்தர பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சா்கள் இடம்பெற்றிருந்தனா்.

அக்குழு அளித்த அறிக்கை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இது தவிர கொரோனா தடுப்பூசி, கொரோனா சிகிச்சை மருந்துகள், கொரோனா பரிசோதனைக் கருவிகள், கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கான சிகிச்சை மருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை நீக்குவது தொடா்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் மீது 5 சதவீத சரக்கு-சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், கொரோனாவுக்கான மருந்துப் பொருள்கள் மீது 12 சதவீத சரக்கு-சேவை வரி விதிக்கப்படுகிறது.

அவற்றின் மீதான வரியை நீக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான கேரளம், பஞ்சாப் உள்ளிட்டவை மத்திய அரசுக்குத் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால், மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை நீக்குவது பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்று மத்திய அரசு தெரிவித்து வந்தது. கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரியை நீக்குவது தொடா்பாக ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளது.

Related Stories: