மருத்துவ முதுகலை படிப்புக்கான இனி-செட் நுழைவு தேர்வு ஒரு மாதம் தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான ‘இனி-செட்’ தேர்வை உச்ச நீதிமன்றம் ஒரு மாதம் தள்ளி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி, ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் உள்ளிட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘இனி-செட்’ என்ற பெயரில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு இந்த தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. எம்எஸ், எம்டி, எம்எச், டிஎம், எம்சிஎச், எம்டிஎஸ் ஆகிய படிப்புகளுக்கு இது நடத்தப்படுகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துவது போல், இதை எய்ம்ஸ் நிர்வாகம் நடத்துகிறது.

இந்நிலையில், இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ மாணவர் அமைப்பு மற்றும் மருத்துவர்கள், உச்ச நீதிமன்றத்தில்  சில தினங்களுக்கு முன் 2 வழக்குகள் தொடர்ந்தனர். ஒரு மனுவில், ‘கொரோனா தடுப் புபணியில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், எய்ம்ஸ் நிர்வாகம் 16ம் தேதி நடத்தும் இனி-செட் தேர்வுக்கு அவர்கள் எப்படி தயாராக முடியும்? அதனால், கொேரானா அச்சுறுத்தல் குறைந்து இயல்புநிலைக்கு நாடு திரும்பும் வரை தேர்வை தள்ளி வைக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு மனுவில், ‘முதுகலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தத்தா, தேர்வை ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எய்ம்ஸ் நிர்வாகத்தின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் பராஷர், ‘‘இனி-செட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டது. இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. ஜூன் மாதத்துக்கான தேர்வை திட்டமிட்டப்படி முடித்தால்தான், நவம்பரில் 2வது தேர்வை நடத்த முடியும். கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், தேர்வை தள்ளிவைக்க தேவையில்லை,’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இனி-செட் தேர்வை ஒரு மாதம் தள்ளிவைக்க உத்தரவிடப்படுகிறது. பிஜி மருத்துவத்தின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர். வழக்கை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: