கலைஞர் நினைவு நூலகத்திற்கு ஓரிரு நாட்களில் இடம் தேர்வு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை: கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடம் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு செய்யப்படும் என வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறினார். மதுரை, ஒத்தக்கடை பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு வளாகத்தில் உள்ள வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஒத்தக்கடை, தல்லாகுளம், சொக்கிகுளம், தெப்பக்குளம் சார்பதிவாளர் அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு நடத்தி, அதிகாரிகளிடம் விசாரணை செய்தார். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் பத்திரப்பதிவு நடைபெற்றதால் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பத்திரப் பதிவு அலுவலகங்களில் கூட்டத்தை குறைக்க, டோக்கன் வழங்கி ஒலிபெருக்கி மூலம் மக்களை ஒழுங்குபடுத்த உத்தரவிட்டுள்ளோம். காலதாமதமின்றி பதிவுப்பணிகள் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்சம், இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறைரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் சரியாக காலை 10 மணிக்கு பத்திர பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகிறது.  கடந்த ஆட்சியில் சரியான நேரத்தில் பதிவுகள் துவங்கியதில்லை. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடம் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: