மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் நிர்வாக அதிகாரி, தாளாளரிடம் 4 மணி நேரம் விசாரணை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சரமாரி கேள்வி

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வழக்கில் அப்பள்ளியின் நிர்வாக அதிகாரி பிரேமலதா, தாளாளர் ப்ரீத்தி ஆகியோரிடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்துகொண்டனர். சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது போல், அயனாவரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. அதைதொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆசிரியர் ஆனந்த் மீது மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களின் படி போலீசார் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் மாணவிகளின் பாலியல் தொடர்பாக மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் நிர்வாக அதிகாரி பிரேமலதா, தாளாளர் ப்ரீத்தி ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் நிர்வாக அதிகாரி பிரேமலதா, தாளாளர் ப்ரீத்தி ஆகியோர் அதிகாரிகள் முன்பு ஆஜராகினர். அவர்களிடம், ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது உங்கள் பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்படும் துன்புறுத்தலை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா? ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவிகள் 2016-17ம் ஆண்டு படித்தவர்கள், அப்போது உங்களிடம் அந்த மாணவிகள் புகார் அளிக்கவில்லையா? மாணவிகளின் புகாரின் படி அப்போது ஏன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டனர். பள்ளி நிர்வாகிகள் இருவரிடமும் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணை மாலை 3 மணிக்கு முடிந்தது. அப்போது பள்ளி நிர்வாகிகள் அளித்த பதிலை தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

Related Stories: