குமரியில் கன்னிப்பூ சாகுபடி தீவிரம்: ஆற்றுபாசனம் பெறும் பகுதியில் விவசாயிகள் பணியை தொடங்கினர்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஆற்று பாசனம் மூலம் தண்ணீர் வசதி பெறும் பகுதியில் தற்போது விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியை தொடங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அதன்படி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை நம்பியே விவசாயம் உள்ளது. இதனை தவிர பருவமழை பெய்யும் போது குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குமரியில் ஆற்று பாசனம், குளத்து பாசனத்தை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. கன்னிப்பூ, கும்பபூ என்று இருபோக நெல்சாகுபடி நடக்கிறது. தற்போது மாவட்டம் முழுவதும் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியை தொடங்கி உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்து வருகிறது. இந்த நிலையில் குமரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள தேரூர் குளம், சுசீந்திரம் குளம், மணவாளக்குறிச்சி பெரிய குளம், வேம்பனூர் குளம், தாழக்குடி குளம் என்று முக்கிய குளங்கள் அனைத்தும் நிரம்பியது. இந்த குளங்களை நம்பி பல ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்அடைந்து வருகின்றன. இதனை தவிர தோவாளை சானல், அனந்தனார் சானல், புத்தனார் சானல், முட்டம் சானல், இரணியல் சானல் உள்பட பல்வேறு சானல்களை நம்பியும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

குமரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் கன்னிப்பூ சாகுபடி தொடங்குவது வழக்கம். இதற்கிடையே கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து குளத்து பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நாற்றங்கால் பயிரிடப்பட்டு இருந்தது. பின்னர் குளத்து பாசன வசதி பெரும் சுசீந்திரம், தேரூர், பறக்கை, பெரியகுளம், வேம்பனூர், தாழக்குடி பகுதியில் கன்னிப்பூ சாகுபடி நடந்தது. கடந்த 4ம் தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்ட விவசாயிகள் ஆற்றுபாசன வசதி பெறும் பகுதிகளில் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஒழுகினசேரி, புத்தேரி, பார்வதிபுரம், தோவாளை பகுதிகளில் நடவு பணிகள் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் அனந்தனார் சானலில் இருந்து பாசன வசதி பெறும் கடைமடையான தெங்கம்புதூர் பகுதியில் ஆற்று தண்ணீர் செல்லாதநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆகவே இருபோக நெல்சாகுபடி பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அறுவடை காலமும் தாமதம் ஏற்படுவதால் அந்த பகுதி விவசாயிகள் பலத்த நஷ்டத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். தற்போது திறக்கப்பட்ட பேச்சிப்பாறை அணைத்தண்ணீரும் தேங்கம்புதூர் பகுதிக்கு செல்லாதால் சுமார் 300 ஏக்கர் நிலத்தில் நெல்சாகுபடி பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது கன்னிப்பூ சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் குளத்து பாசன வசதி பெரும் பகுதிகளில் நடவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆற்றுபாசன வசதி பெரும் பகுதிகளில் தற்போது நடவு பணிகள் நடந்து வருகிறது. தற்போது அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் பருவமழை பெய்யவுள்ளதால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குமரி மாவட்டத்தில் உரங்கள் எந்தவித தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. ஆனால் உரங்களின் விலை கடைக்கு கடை வித்தியாசமாக இருந்து வருகிறது.

இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரக்கடைகளில் உரங்களின் விலைபட்டியலும் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

Related Stories: