எங்க வார்டில் ஆண் போட்டியிட்டு எப்படி ஜெயிக்கலாம்... அதெல்லாம் செல்லாது... மீண்டும் தேர்தல் நடத்துங்க! உ.பி-யில் பெண் வேட்பாளர்கள் போர்க்கொடி

பரேலி: உத்தரபிரதேசத்தில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டிய வார்டில் ஆண் வேட்பாளர் போட்டியிட்டு வென்றதால், அங்கு புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி அடுத்த நவாப்கஞ்ச் தொகுதியின் கஜ்ரவுலாவில் கிராம பஞ்சாயத்துக்கு வார்டு தேர்தல் நடந்தது. மாநில தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, இந்த வார்டில் பெண் வேட்பாளர்கள்தான் போட்டியிட வேண்டும். ஆனால், பெண் வேட்பாளர்களுடன் சேர்ந்து ஆண் வேட்பாளர் கியாலி ராம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி, அவரது வேட்பு மனுவை நிராகரிக்காததால் அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வாக்குப்பதிவும் நடைபெற்று முடிவுகள் அறிவித்த போது, ஆண் வேட்பாளர் கியாலி ராம் 271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர், வெற்றி சான்றிதழை கியாலி ராமுக்கு வழங்கினார். ஆனால், இப்போது பெண்கள் போட்டியிட வேண்டிய வார்டில், ஆண் வேட்பாளர்களை எப்படி தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சுழற்சி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் பெண் வேட்பாளர்கள் நம்பியதால், அவர்கள் வேட்புமனு பரிசீலனையின் போது எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் வார்டின் இடஒதுக்கீடு நிலவரம் அறியாமல் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது தெரியவந்தது.

இப்போது பிரச்னை என்னவென்றால், ஆண் வேட்பாளர் இடஒதுக்கீடு விதிமுறையை மீறி வெற்றிப் பெற்றால், அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் வார்டில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பெண் வேட்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் வார்டு மக்கள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து  நவாப்கஞ்ச் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி ரன்வீர் பிரசாத் கூறுகையில், ‘தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தேர்தல் பணிக்கு வந்தேன். அதற்குள் வேட்புமனு தாக்கல் முடிவாகி இருந்தது. இவ்விவகாரம் இப்போதுதான் தெரியவந்துள்ளது. மாவட்ட கலெக்டர் நிதிஷ்குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்’ என்றார்.

Related Stories: