ஸ்டான்லி மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட கருப்பு பூஞ்சை சிகிச்சை மையம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட கருப்பு பூஞ்சை சிறப்பு சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கருப்பு பூஞ்சை நோயை  குணப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிக்கும் வகையில், 150 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், காமராஜர் போர்ட் டிரஸ்ட்டின் சிஎஸ்ஆர் செயல்பாட்டின் கீழ், 55 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 50 லட்சம் மதிப்பீட்டில் 8 பேட்டரி கார்களை அதன் தலைவர் சுனில் பலிவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார். தொடர்ந்து பேட்டரி கார்கள் சேவையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த கருப்பு பூஞ்சை வார்டில் 150 ஆக்சிஜன் படுக்கைகளுடன், 40 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர் வசதிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய ஆபரேஷன் தியேட்டரும் உள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் உள் நோயாளிகளின் விவரங்களை அறிய டிஜிட்டல் தகவல் பலகையையும்  உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி, நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும்  சுகாதார  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் banyan  உதவியுடன், கொரோனா நோயாளிகளின் விரம் அறியும் டிஜிட்டல் தகவல் பலகை மற்றும் உதவி மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அடையாறு ஆனந்தபவன் சார்பில் வழங்கப்பட்ட 80 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணிபுரிய 70 மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Related Stories: