பணி செய்யும் காவலர்களை யாரும் அச்சுறுத்துவதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரை: கொரோனா நோய் தொற்று சூழலில் காவல்துறையினர் தங்களது கடமையை செய்யும் போது அவர்கள் அச்சுறுத்தப்படும் விவகாரங்களில் இந்த நீதிமன்றம் மென்மையாக இருக்கப்போவதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். திருச்சியில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் 5 இளைஞர்கள் போலீசாரால் தடுக்கப்பட்டுள்ளனர். ஒரே ஆட்டோவில் சென்ற 5 பேரை தடுத்த போலீசாரை கீழே தள்ளிவிட்டதாக இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆட்டோவில் சென்ற 5 பேரில் ஒருவரான காஜா என்பவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில், போலீசார் ஏற்கனவே அதிக மன அழுத்தத்துடன் பணி செய்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டார். ஈடில்லா உயிர்களை வைரஸ் எடுத்துச் செல்லும் சூழலில் ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கடமையை செய்யும் காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் விவகாரங்களில் மென்மையாக இருக்கப்போவதில்லை.

ஊரடங்கு காலத்தில் யார்? எங்கு செல்கின்றனர் என போலீஸ் கேள்வி எழுப்பினால் விளக்கமளிக்க வேண்டும். காவல்துறையை அச்சுறுத்துவதையோ, துஷ்பிரயோகம் செய்வதையோ ஏற்க முடியாது. மனுதாரர் காவல்துறையினரிடம் நடந்துகொண்ட விதத்திற்கு மன்னிப்பு கோருவதுடன், இனிமேல் இதுபோன்று நடக்காது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் அவரை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: