நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் சரிவு: உருமாறிய வைரஸ் பரவி வரும் நிலையில் கட்டுப்பாடு தளர்வுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் 68 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் சரிந்தது. உருமாறிய வைரஸ் பரவி வரும் நிலையில், கட்டுப்பாடு தளர்வுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் தினசரி கொரோனா உயிரிழப்புகளில் 28 விழுக்காடு இந்தியாவில் பதிவாகிறது. இந்தியாவின் தினசரி பாதிப்புகள் கடந்த 68 நாட்களுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துவிட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 87,345 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், 2,115 பேர் தொற்றுபாதிப்பால் புதியதாக இறந்துள்ளனர். மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,89,96,949 ஆகவும், மொத்த இறப்புகள் எண்ணிக்கை 3,51,344 ஆகவும் உள்ளன. கொரோனா இரண்டாவது அலையில் தொற்று பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,448 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் கர்நாடகாவில் 11,958 பேர், கேரளாவில் 9,313 பேர், மகாராஷ்டிராவில் 10,219 பேர், ஆந்திராவில் 4,872 பேர் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா (58,42,000), கர்நாடகா (27,07,481), கேரளா (26,42,395), தமிழ்நாடு (22,56,681), ஆந்திரா (17,63,211) ஆகிய 5 மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. நாடு முழுவதும் 14,00,609 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி போட்டுக்  கொண்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 27 லட்சமாக உள்ளது. தொற்று உறுதியானோர் விகிதம் கடந்த வாரம் 9.4 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது 4.2 விழுக்காடாக சரிந்துள்ளது.

இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லியில் மூன்று வாரங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை 50 விழுக்காடு பயணிகளுடன் இயங்க தொடங்கியுள்ளன. மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே நகரங்களில் பேருந்துகள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், சந்தைகள் இயங்க தொடங்கியுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தேனீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், ‘இந்தியாவில் 23 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. ஏழு நிறுவனங்கள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. இன்னும் மூன்று கொரோனா தடுப்பூசிகள் பல கட்ட சோதனைகளில் இருக்கின்றன.

தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்யும் மாநிலங்களின் சுமையை மத்திய அரசே ஏற்கும். 18 முதல் 44 வயதுடையவர்களுக்காக மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசி மருந்துகளுக்கான செலவை இனி மத்திய அரசே ஏற்கும். ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்’ என்று கூறினார். இந்நிலையில், உலக சுகாதார நிறுவன (டபுள்யூஎச்ஓ) இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனம் உருமாறிய கொரோனா மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், ‘உருமாறிய ‘டெல்டா’ வகை வைரஸ் உட்பட உருமாறிய கொரோனா வைரஸ் உலகளாவிய பரவுதல் காரணமாக கவலையை ஏற்படுத்தி வருகிறது. கட்டுப்பாட்டை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முடிவெடுக்க நான்கு மாதமா?

நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குங்கள் என்று பிப்ரவரி மாதம் முதல் பல முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மிகுந்த அழுத்தம் வந்த பிறகு நமது பேச்சையும் (மாநில அரசு) , நாம் கேட்டுக்கொண்டதையும் அமல்படுத்த பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவிய தொடக்கத்தில் இருந்தே நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிரை வாங்கிவிட்டது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் மற்றும் அது தொடர்பான நிர்வாகம் இந்த முறை அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: