மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி கொரோனா லேகியம் மீண்டும் விநியோகம்

திருமலை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதியின்பேரில் ஆந்திராவில் கொரோனா தடுப்பு லேகியம் தயாரித்து விநியோகம் செய்யும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டினத்தில் உள்ள சர்வேபள்ளி கிராமத்தில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்த லேகியம், கொரோனாவை குணப்படுத்துவதாக சில வாரங்களுக்கு முன் தகவல் பரவியது. இதனுடன் கண்களில் 2 சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு வந்தது. இதன்மூலம் கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைவதோடு, ஆக்சிஜன் அளவும் சகஜநிலைக்கு வருவதாக நோயாளிகள் நம்பினர். இதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரணை மேற்கொண்டதுடன் லேகியம் மற்றும் சொட்டு மருந்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதுவரை மருந்து விநியோகிக்க தடை விதிக்கப்பட்டது.

மத்திய ஆயுஷ் நிறுவனம் லேகியத்தை பரிசோதித்தது. அதில், நோய் எதிர்ப்பு சக்தி மிக்க பக்க விளைவுகள் இல்லாத லேகியம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அனுமதியின் பேரில் நேற்றுமுன்தினம் முதல் லேகியம் வழங்க ஆனந்தய்யா முடிவு செய்தார். அதன்படி லேகியம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை சேகரித்து உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளித்து லேகியம் கொடுக்கும் பணியை தொடங்கினார். இரவு, பகலாக லேகியம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆனந்தய்யா கூறுகையில், ‘‘ உள்ளூர் மக்களுக்கு கொடுத்து முடித்த பிறகே ஆந்திரா, தெலங்கானா மாநில மக்களுக்கு மாவட்ட வாரியாக  சிறப்பு மையம் அமைத்து லேகியம் வழங்கப்படும்’’ என்றார்.

Related Stories: