தகவல் தொழில்நுட்பத்துறையை சிறந்ததாக மாற்றுவோம்: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

சென்னை: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையை இந்தியாவிலேயே சிறந்த துறையாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா 2வது அலை பரவி வரும் சூழலில், மக்களின் வசதிக்காக சில தளர்வுகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நமது இணையதளத்தில் இ-பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 5 லட்சம் முதல் 6 லட்சம் வரையிலான பதிவுகள் மட்டுமே வழக்கமாக பதிவாகும்.

ஆனால், இன்று(நேற்று) எதிர்பாராத விதமாக இ-பதிவு 60 லட்சத்தையும் தாண்டி சென்றுவிட்டது. இதனால் இணையதளம் முடங்கியது. மாலைக்குள் இது சரிசெய்யப்படும். தமிழ்நாட்டின் தொழில்நுட்பத்துறையை இந்தியாவிலேயே சிறந்த துறையாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. எங்கள் துறையின் சேவை பல துறைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. பேமலி மேன் -2 தொடரானது தமிழ்நாட்டின் வரலாற்றை திரித்து சொல்கிறது. இது எந்த விதத்திலும் சரியாக இருக்காது என்று நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். எங்களின் நிலைப்பாடு இப்போதும் ஒரே நிலை தான். மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.  அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்புடன் வாழ அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கிறது. மாணவர்களின் நலன் எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் இந்த அரசு பாதுகாக்கும். இவ்வாறு கூறினார்.

Related Stories: