ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் கைது

சென்னை: அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்று விட்டு சார்ஜா வழியாக இந்தியா திரும்பிய மதுரை, ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா சிறப்பு ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன் தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் முகமது (55), மதுரையை சேர்ந்த சுடர்மணி (33) ஆகியோரது பாஸ்போர்ட்களை ஆய்வு செய்தனர். அப்போது, ‘இருவரும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சார்ஜாவுக்கு சென்றுள்ளனர். அங்கு சட்ட விரோதமாக, இந்திய அரசின் அனுமதியின்றி, தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர், சார்ஜா வழியாக மீண்டும் சென்னைக்கு திரும்பியது தெரியவந்தது. விசாரணையில், ‘ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் வேலை செய்த நிறுவனம்தான், எங்களை சில மாதங்கள், ஏமனில் வேலை செய்யும்படி அனுப்பி வைத்தது’ என்று இருவரும் கூறினர். இதை, குடியுரிமை அதிகாரிகள் ஏற்கவில்லை. இருவரையும் மேல்நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: