புதுச்சேரி மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரி: புதுச்சேரி மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், வகுப்புகள் ‘ஆன்லைனில்’ மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவே 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வையும், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.

பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண், உயர்கல்விக்கு மிகவும் முக்கியம் என்பதால் அந்த தேர்வை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வந்தது. கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் ஏற்கனவே மே 3 ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த பிளஸ்2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நோய்த்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டன. இந்தசூழலில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

இந்தக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களை கொண்டு மட்டுமே, தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக பாடத்திட்டங்களே புதுச்சேரியிலும் பின்பற்றப்படுவதால் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: