கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் பலி

கடலூர்:  கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தற்போது மியூகோர்மைகோசிஸ் எனும் அரியவகை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. குறிப்பாக ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெண் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு சர்க்கரை நோயும் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அவருடைய நுரையீரலில் வீக்கம் காணப்பட்டதால், மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Related Stories: