மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பயங்கர தீ விபத்து: அம்மன் கருவறையில் தீ பிடித்து எரிந்ததால் பக்தர்கள் வேதனை

குளச்சல்: குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மன் புற்றுவடிவில் காட்சி தருகிறார். தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. தினசரி பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு நடை சாத்தப்படும். இந்நிலையில் இன்று காலையில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு வழக்கமான தீபாராதனை முடிந்து பூஜாரிகள் வெளியே வந்தனர். கோயிலுக்கு ஏதேனும் பக்தர்கள் வருகை தந்தாலும் அவர்கள் வெளியே சாலையில் நின்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் காலை 7 மணியளவில் வெளியே சாலையில் நின்றவாறு பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது கோயில் கருவறையின் மேற்கூரையில் தீ பிடித்தது கண்டு அதிர்ச்சியடைந்து அவர் கூச்சல் போட்டார். அதன் பிறகு அலுவலர்கள் அங்கு வந்து பார்த்தனர். அதற்குள் மேற்கூரையில் தீ மேலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் கூரையில் மளமளவென்று தீ பிடித்து ஓடுகள் வெடித்து சிதறின. அம்மன் சொரூபத்தில் அலங்காரத்திற்கு போடப்பட்டிருந்த பட்டுகள் கருகி சாம்பலாகின. கருவறை முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது. தகவலறிந்து குளச்சல், தக்கலை  தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அம்மன் கருவறையில் தீ பிடித்து எரிந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

Related Stories: