நாப்கின் தயாரிப்புக்கு விதிமுறை ஏற்படுத்த வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நாப்கின் தயாரிப்புக்கு விதிமுறைகளை ஏற்படுத்தக் கோரிய வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் துணிகளை வைத்து அதன் சுகாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் விலை, மற்றும் பேக்கிங்கை பார்த்தே பலரும் வாங்குகின்றனர். தயாரிப்பில் எந்தெந்த பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்பது குறித்த விபரம் இல்லை. சுகாதாரமற்ற நாப்கின்கள் மூலம் புற்றுநோய், கருப்பை, சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட நோய்களும், மலட்டுத்தன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மூன்றடுக்கு நாப்கினில் சேர்க்கப்படும் ஒருவகை திரவத்தால் தோல் வியாதிகள், தலைவலி, காய்ச்சல் போன்றவையும், ரத்த அழுத்தம், மூளை சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படக் கூடும். எனவே, நாப்கின் தயாரிப்புக்கு புதிதாக விதிமுறைகளை ஏற்படுத்தவும், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு பயன்படும் டயாப்பர் மற்றும் நாப்கின் போன்றவை எந்த பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறித்து பாக்கெட்டுகளில் அச்சிடவும், தர பரிசோதனை மேற்ெகாள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: