1 முதல் 8ம் வகுப்புவரை தேர்வின்றி தேர்ச்சி விவகாரம் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்: தொடக்க கல்வித்துறை உத்தரவு

சென்னை: அனைத்து வகைப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்த நிலையில், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குநர், வெளியிட்டுள்ள  சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் முழு  ஆண்டுத் தேர்வு மற்றும் 10, பிளஸ் 1வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் எதுவும் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு  வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களின் பேரில், ‘‘ எட்டாம் வகுப்பு முடியும்  வரையில் எந்த ஒரு மாணவரையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது அதாவது அனைவரும் தேர்ச்சியுற வேண்டும். எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் அனைத்து பள்ளிகளிலும் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தேர்ச்சிப் பதிவேட்டில், மேற்கண்ட வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள், இதர நலத்திட்ட உதவிகள் பள்ளிகள் திறந்த பிறகு வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

Related Stories: