ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து முன்னாள் மாணவிகள், தற்போது பயின்று வரும் மாணவிகள் என பலர் அவர் மீது ரகசியமாக புகார் அளித்தனர்.

இதனைதொடர்ந்து கடந்த 24ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் ராஜகோபாலனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி முகமது பரூக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக சிறையில் இருந்த ராஜகோபாலன், போலீஸ் பாதுகாப்புடன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, இந்த வழக்கில் இன்னும் யார் யாருக்கு தொடர்புள்ளது, புதிதாக வரும் புகார்கள் குறித்து ராஜகோபாலனிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு போலீஸ் காவல் வழங்ககூடாது என்று ராஜகோபலன் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அவரை 4ம் தேதி 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். ராஜகோபாலன் ஜாமீன் கோரிய மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: