மாணவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது: 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து..! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் அலையை விட கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை எற்படுத்திவருகிறது. இதனால், கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என மத்திய அரசு ஆலோசித்துவந்தது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தவுடன் ஜூலை மாதம் தேர்வுகளை நடத்த கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினர்.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மாநிலங்கள் அளித்துள்ள எழுத்துப்பூர்வ கருத்துகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆலோசனையில், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். தற்போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.கொரோனா சூழலில் மாணவர்கள் நலன் கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், மாணவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: