வேலூர் கோட்டை மலை உச்சியில் புதைந்திருந்த பிரிட்டிஷார் கால பீரங்கி கண்டெடுப்பு

வேலூர்: வேலூர் கோட்டை மலை உச்சியில் மண்ணில் புதைந்திருந்த பிரிட்டிஷார் கால பீரங்கி கண்டெடுக்கப்பட்டது. வேலூர் நகரின் வடகிழக்கில் இருந்து தென்கிழக்காக செல்லும் மலைத்தொடரில் 5 மலைக்கோட்டைகள் அமைந்துள்ளன. வேலூர் சார்பனாமேட்டை ஒட்டி மலை மீதுள்ள கோட்டையை ஒட்டி மலை உச்சியில்ராஜா ராணி குளம் அருகே நேற்று சென்ற இளைஞர்கள், இரவு பெய்த மழையால் மண் அரிக்கப்பட்டு பூமியில் புதைந்திருந்த இரும்பு பீரங்கி ஒன்று வெளிப்பட்டிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர். பின்னர் அவர்கள் அதை சுற்றியுள்ள மண்ணை வெட்டி அகற்றி பீரங்கியை முழுமையாக வெளியில் தெரியும்படி கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று மாலை அந்த பீரங்கியை மீட்டனர். இரும்பால் ஆன இந்த பீரங்கி சுமார் 5 அடி நீளம் கொண்டது. மேலும் இது கி.பி.17 அல்லது 18ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி வனத்துறையினரிடம் கேட்டபோது, பீரங்கி மீட்கப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இதுதொடர்பாக வனத்துறை உயர்அதிகாரிகளுக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு அது வருவாய்த்துறை மூலம் அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிவித்தனர். ஏற்கனவே 2 ஆண்டுக்கு முன்பு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கோசாலை அருகில் மண்ணில் புதைந்திருந்த பீரங்கிகள், இரும்பு மற்றும் கல் குண்டுகள் மீட்கப்பட்டடது குறிப்பிடத்தக்கது.

Related Stories: