லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் படேல்லை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!!

திருவனந்தபுரம்: லட்சத்தீவு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் நிர்வாக அதிகாரி பிரபுல் படேல்லை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் பிரபுல் படேல் நியமிக்கப்பட்டதை அடுத்து அவரது நடவடிக்கைகள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது, அங்கு வழக்கத்தில் இல்லாத மது விற்பனையை அறிமுகப்படுத்தியது என்று பிரபுல் படேலின் செயற்பாட்டிற்கு கேரள மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், லட்சத்தீவு தொடர்பான தீர்மானத்தை கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் முன்மொழிந்தார். அப்போது லட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் லட்சத்தீவில் வசிக்கும் மக்களின் உணர்வுகளை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை என்றும் பினராயி விஜயன் கோரிக்கைவிடுத்தார். மேலும் மக்களின் உணர்வுகளை மதிக்காத நிர்வாக அதிகாரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

லட்சத்தீவு மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் முன்மொழிந்த தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணர்வுகளை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: