செக்கச் சிவந்த உணவு!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertising
Advertising

சமீபகாலமாக Schezwan என்ற உணவு ஓட்டல்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. செஸ்வான் நூடுல்ஸ், செஸ்வான் சாஸ், செஸ்வான் பிரியாணி என்று பல விதமாக, பல வெரைட்டிகளிலும் கிடைக்கிறது. இளையதளங்களில் செஸ்வான் உணவுமுறை பற்றி தயாரிப்பு பற்றித் தேடினால், காரசாரமான வீடியோக்கள் கிடைக்கின்றன.

ஒரு கைப்பிடி அளவு மிளகாயை மிக்ஸியில் அள்ளிப் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு போன்றவற்றைச் சேர்த்து பார்க்கும்போதே கண்ணில் தண்ணீர் வரும் அளவு தயார் செய்கிறார்கள். பார்ப்பதற்கு செக்கச் சிவப்பாய் காட்சியளிக்கிறது. இந்த செஸ்வான் உணவு பற்றி சொல்லுங்கள் என்று உணவியல் நிபுணர் கோமதி கௌதமனிடம் கேட்டோம்...

‘‘உலகம் முழுவதும் பல்வேறு உணவுப்பழக்கங்கள் உண்டு. இது அந்தந்த நிலப்பகுதிகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் தயாரித்து பயன்படுத்துகிறார்கள். அந்த உணவு அவரவர் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப அமைகிறது.

அந்த வகையில் செஸ்வான்(Schezwan) என்பது சீன நாட்டு உணவு வகையாகும். நம் ஊரில் துணை உணவாக தேய்காய் சட்னி, புதினா சட்னி, காரச்சட்னி போல் சீன மக்களுக்கு செஸ்வான் ஒரு துணை உணவு ஆகும். இந்தியாவை போல சீன வகை உணவும் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ்வான் காய்ந்த மிளகாயை மையமாக வைத்து தயாரிக்கும் ஒரு வகை உணவு. இதில் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சைனீஸ் வினிகர், எண்ணெய், சோயா சாஸ், தக்காளி சாஸ், வெள்ளை சர்க்கரை, உப்பு போன்றவை கலந்து தயாரிக்கப்படுகிறது. கார சுவையினை விரும்புபவர்களுக்காக தயாரிக்கப்படுகிற உணவு இது.

சீனாவில் பிரியாணி, நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளுக்கு துணை உணவாக செஸ்வானை பயன்படுத்துகிறார்கள். சீனாவில் இருந்து நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ் நம் நாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்றைக்கு செஸ்வானும் உள் நுழைந்துவிட்டது. இப்போது நம் ஊர் உணவகங்களிலும்  நிறைய வகைகளில் செஸ்வான் கிடைக்கிறது. ஆனால், அது சீன முறைப்படி தயாரிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்’’ என்றவரிடம், சீன முறையில் தயாரிப்பதால் என்னென்ன பலன்கள் உண்டு என்று கேட்டோம்...

‘‘சீன முறைப்படி தயாரிக்கப்பட்ட செஸ்வானில் ஆன்டி ஆக்ஸிடென்டுகளின் அளவு அதிகம் இருக்கிறது. பசியைத் தூண்டுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது, உடல் வலியைக் ​​குறைக்க உதவுகிறது, எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் இஞ்சி, பூண்டும் சேர்ப்பதால் செரிமான செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. வாயுத் தொல்லைகளுக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் கரோட்டின்களும் உள்ளது.’’

செஸ்வான் தயார் செய்ய விரும்புகிறவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

‘‘செஸ்வான் போன்ற பிற நாட்டு உணவுகளை நம் ஊரில் தயாரிக்கும்போது அதனுடைய தன்மையை கெடுத்து விடாமல் தயாரிக்க வேண்டும். மேலும் பிற நாட்டு உணவுவகைகள் நாம் பெரும்பாலும் உணவகங்களில்தான் சாப்பிடுகிறோம்.

அதனால் அந்த உணவு முறையாக தயாரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். சில உணவகங்களில் தரமற்ற எண்ணெயில் பொறித்து இது தயாரிக்கப்படுகிறது. இதனால் அதன் ஊட்டச்சத்து நமக்கு கிடைக்காமல் அது நம் உடலுக்கு தீங்கினை விளைவிக்கிறது.’’

செஸ்வான் சேர்த்துக் கொள்வதால் பிரச்னைகள் வராதா?

‘‘கார சுவையையும், மசாலா உணவையும் விரும்புகிறவர்களுக்கான் பிரத்யேக உணவு இது. ஆனால், இந்த காரமும், மசாலாவும் எல்லோரின் உடலுக்கும் ஒத்துக் கொள்ளாது. வெளிநாட்டின் சீதோஷ்ண நிலைக்கும், அவர்களின் உடல்நிலைக்கும் வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால், நமக்கு சரி வருமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஏனெனில், செஸ்வான் உணவு வகைகளைத் தொடர்ந்து உண்டு வந்தால் அல்சர், வயிறு தொந்தரவு, செரிமானப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.’’

- க.இளஞ்சேரன்