டொமினிகோ நீதிமன்றம் உத்தரவு: வைர வியாபாரி சோக்சிக்கு கொரோனா பரிசோதனை

புதுடெல்லி:  டொமினிகாவில் கைது செய்யப்பட்ட மெகுல் சோக்சிக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வைர வியாபாரி நீரவ் மோடி , அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர்  13,500 கோடி கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தனர். கடந்த 2018ம் ஆண்டு ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த மெகுல் சோக்சி, கடந்த செவ்வாயன்று திடீரென காணாமல் சென்றார். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக டொமினிகா தப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. டொமினிகா போலீசார் சோக்சியை கைது செய்தனர். அவரை நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டுமெ ஆன்டிகுவா அரசு கேட்டுக் கொண்ட போதிலும் டொமினிகா அரசு மறுத்து விட்டது.

மேலும், சோக்சியை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே மெகுல் சோக்சியின் வழக்கறிஞர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர் . இந்த மனுவை விசாரித்த டொமினிகா நீதிமன்றம் மெகுல் சோக்சியை நாடு கடத்துவதற்கான தடையை நீடித்துள்ளதோடு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மெகுல் சோக்சியின் வழக்கை வருகிற 2ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: