கார், பைக்குகளில் நீண்ட வரிசை: ஆந்திராவில் உள்ள மதுக்கடையில் குவியும் தமிழக மதுப் பிரியர்கள்

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ட ாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஆந்திராவில் உள்ள மதுக்கடைகளுக்கு குடிமன்னர்கள் படையெடுத்து செல்வதால் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக குடிமன்னர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆந்திராவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அங்கு மதியம் 12 மணி வரை மதுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குடிமன்னர்கள் மற்றும்  ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்கே.பேட்டை பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் இருந்து குடிமன்னர்கள் ஆந்திராவில் உள்ள கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் ஆந்திராவில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பைக், கார்களில் சென்றுவருவதால் வாகனங்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மதுக்கடைகளில் நீண்டவரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு தமிழக எல்லைக்கு வருகின்றவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி விசாரிக்கின்றனர். மதுபாட்டில்களை பறிமுதல் செய்கின்றனர். மதுபாட்டில்கள் கடத்திவருகிறார்களா என்பதை கண்காணிக்க ஊத்துக்கோட்டை போலீஸ் டிஎஸ்பி என்.சி.சாரதி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து குடிமன்னர்கள் வருகின்றனர். சென்னையில் இருந்து பைக், கார்களில் செல்வதாக தெரிகிறது.

Related Stories: