முன்னாள் மாணவிகள் புகாரின்பேரில் மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி  வெளியிட்ட அறிக்கை: பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளி விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்ததின் விளைவாக மேலும் சில பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவிகள் ஆணையத்தின் மின்னஞ்சலுக்கு புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி சேத்துப்பட்டில் இயங்கி வரும் மகரிஷி வித்யா மந்திர் மற்றும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேற்படி பள்ளிகளில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில் மேலும் விசாரணை செய்வதற்காக மகரிஷி வித்யா மந்திர் தாளாளர் சம்பந்தப்பட்ட ஆசிரியர், புகார் கொடுத்த மாணவிகள் என அனைவரும் வரும் 10ம் தேதி விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே போல ராஜா அண்ணாமலை புரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் அனைவரையும் தீவிர விசாரணைக்காக வரும் 8ம் தேதி ஆணையத்தில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் செனாய்நகரில் உள்ள எஸ்டி.ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி சம்பந்தமாக இதே பாலியல் புகார் பெறப்பட்டதின் அடிப்படையில் அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் சம்மன் அனுப்ப ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு வரும் 7ம் தேதி விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: