மரி மாவட்டம் முழுவதும் கனமழை நீடிப்பு: வயல்கள், வாழை தோட்டங்கள் குடியிருப்புகளில் வெள்ளம்: ஏராளமான வீடுகள் இடிந்தன

குநாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்தன. வயல்கள், வாழைத்தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  வங்க கடலில் உருவான ‘‘யாஸ்’’ புயல் ஒடிசாவில் கரையை கடந்தது. இதன் எதிரொலியாக குமரியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காணப்பட்டது. பலத்த மழை, சூறை காற்று காரணமாக பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் பெயர்ந்தும், முறிந்தும் விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் உடைந்து பல பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபட்டது. கோதையாறு, குழித்துறை தாமிரபரணி, பழையாறு மற்றும் வள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. ஏ.வி.எம் சானல் நிரம்பியதால் காக்கைகுளம், பெரிய குளம் மற்றும் தாமரைக்குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நீர் நிலைகளின் அருகே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பல ஏக்கர் நெற்பயிர்கள், வாழைத் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.86 அடியாக இருந்தது. மறுகால் வழியாக 6508 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.  பெருஞ்சாணி நீர்மட்டம் 75 அடியாக இருந்தது. வினாடிக்கு 996 கன அடி தண்ணீர் மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டது. முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. பல பகுதிகளில் மண் சுவர்களிலான ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் இடிந்து விழுந்தன. நேற்று காலை வரை மேலும் 110 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதுவரை மொத்தம் 252 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது என அதிகாரிகள் கூறினர்.அமைச்சர்கள் ஆய்வு: தமிழக  வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர்  மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர் மனோதங்கராஜ்  கூறுகையில், 650 ஹெக்டர்  வாழைகள் சேதம் அடைந்துள்ளது. இதர பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. 2 நாளில் சேத கணக்கெடுப்பு  முடிந்துவிடும் என்றார்.

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு

குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 25ம் தேதி இரவு தொடங்கி நேற்று காலை வரை மழை கொட்டியது. பாபநாசத்தில் அதிகபட்சமாக 83 மிமீ மழையும், ராதாபுரம் வட்டாரத்தில் 81 மிமீ மழையும் பெய்தது. கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் அதிகாலையிலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாபநாசம் அணையில் கடந்த 2 நாளில்  நீர் மட்டம் 10 அடி உயர்ந்து 129.5 அடியாக உள்ளது.

Related Stories: