கர்நாடக அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் உதவியை நாடியுள்ளார் முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏகள் போர்கொடி உயர்த்தி வரும் நிலையில், தனக்கு எதிரான அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்களின் ஆதரவை நாடி வருகிறார். மாநில முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற நாள் முதல், சில பாஜ மூத்த எம்எல்ஏகள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். சொந்த கட்சி எம்எல்ஏகளை புறகணித்து பிற கட்சியில் இருந்து வந்த 50 சதவீத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்துள்ளதால், தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.

சில மூத்த எம்எல்ஏகள் மவுனமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய விஜயபுரா நகரம் தொகுதி எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் ஆர்.யத்னால் வெளிப்படையாகவே முதல்வர் மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார். மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நோக்கத்தில் முதல்வர் எடியூரப்பா பல்வேறு முயற்சிகளை மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். அதே சமயத்தில் அவரின் அரசியல் எதிரிகள் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, புதிய முதல்வர் நியமனம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதை உறுதி செய்யும் வகையில் சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், ஹுப்பள்ளி-தார்வார் தெற்கு தொகுதி எம்எல்ஏ அரவிந்த பெல்லத் உள்பட 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏகள் கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் முகாமிட்டு பாஜ மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநில பாஜ மேலிட பொறுப்பாளர் அருண்சிங், பாஜ தேசிய அமைப்பு ெசயலாளர் சந்தோஷ் உள்பட பலர் பங்கேற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. பாஜ மேலிடத்தில் எடியூரப்பாவை பிடிக்காத சில தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று வருவதாகவும்,

கட்சி எம்எல்ஏகள் கருத்தை கேட்பதுடன் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வசதியாக கட்சி எம்எல்ஏகள் கூட்டம் நடத்த முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிடும் படி பாஜ மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து வரும் ஜூன் 7ம் தேதி கட்சி எம்எல்ஏகள் கூட்டம் நடத்த முதல்வர் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை: இதனிடையில் கட்சியில் தனக்கு எதிராக சிலர் போர்கொடி உயர்த்தி வரும் நிலையில், முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்வர் எடியூரப்பா முடிவு செய்தார்.

அதன்படி பெங்களூருவில் உள்ள அவரின் அரசு இல்லமான காவிரியில் மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் முகுந்த் உள்பட நிர்வாகிகளுடன் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் இந்த ஆட்சி இன்னும் இரண்டாண்டுகள் மட்டுமே உள்ளது. இதுவரை நான் முதல்வராக தொடர நீங்கள் கட்சி மேலிடத்திடம் பேச வேண்டும். முதல்வர் மாற்றம் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தால் வரும் 2023ல் நடக்கும் சட்டபேரவை தேர்தலில் கட்சி மிக பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என்பதையும் கட்சி மேலிடத்திடம் எடுத்து கூறும்படி கேட்டு கொண்டதாக தெரியவருகிறது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை தொடர்ந்து சங்பரிவார் அமைப்பின் முன்னணி தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வரும் முதல்வர் ஓரிரு நாட்களில் நேரில் சந்தித்து பேசவும் முடிவு செய்துள்ளார்.

நம்பியவர்கள் துரோகம்

மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்களில் முதன்மையாக இருந்தவர் சுற்றுலாதுறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், அவரே தற்போது எடியூரப்பா தலைமை மாற்றம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டுவருவதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக கட்சி மாறி பாஜவில் வந்து அமைச்சர்களாக இருக்கும் சுதாகர், பைரதி பசவராஜ் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. தான் நம்பியவர்களே தனக்கு துரோகம் செய்து வருவதாக நெருக்கமானவர்களிடம் முதல்வர் எடியூரப்பா வேதனையை கொட்டி வருவதாக தெரியவருகிறது.

இன்று அமைச்சரவை கூட்டம்

மாநிலத்தில் ஆளும் பாஜவில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூரு விதானகவுதாவில் இன்று முதல்வர் எடியூரப்பா தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அதில் எடியூரப்பாவுக்கு எதிராக காய் நகர்த்தி வரும் அமைச்சர்கள் பங்கேற்பார்களா? இல்லையா? என்பது தெரியவரும். சில அமைச்சர்கள் டெல்லியில் இருந்து இன்னும் பெங்களூரு திரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Related Stories: