ஊட்டி அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பிளான்ட்-அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார்

ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்டினை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பொருத்த வரை ஊட்டி அரசு மருத்துவமனையில் 130 படுக்கைகளும், குன்னூர் மருத்துவனையில் 34 படுக்கைகளும், கூடலூரில் 44 படுக்கைகளும், கோத்தகிரியில் 10 படுக்கைகளும், பந்தலூரில் 10 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளன. இதுதவிர மருத்துவமனை வளாகத்தில் 1500 கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் உள்ளது. இதை பயன்படுத்தி ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.45 லட்சம் மதிப்பில் மருத்துவனையில் மருத்துவ ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்றது.

இதற்காக 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் ஸ்டேரேஜ் டேங்க் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டது. அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் செல்லும் வகையில் குழாய்கள் பொருத்தப்பட்டன. பின்னர், ஆக்சிஜன் லாரி வந்து செல்லும் வகையில் தரைத்தளம் கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

முழுமையாக தயாரான நிலையில் இதனை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில்,`ஊட்டி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 1500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் உள்ள நிலையில், தற்போது புதிதாக 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் இருக்காது. பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பில்லை’ என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி டீன் மனோகரி உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: