மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் நீலகிரியில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது-கூட்டத்தில் அமைச்சர் ராமசந்திரன் தகவல்

ஊட்டி :  கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நீலகிரி மாவட்ட உயர் அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆலேசானை நடத்தினார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நடந்தது. இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இன்ட்கோ சர்வ் முதல்மை அலுவலர் சுப்பிரியா சாஹூ, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்பி, பாண்டியராஜன், சுகாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி, மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி ஆசுகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்துக் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் நீலகிரி மாவட்டம் முன் மாதிரி மாவட்டமாக விளங்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கை தமிழகத்தில் அமல்படுத்தி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. வாகனங்கள் மற்றும் ஆட்கள் வெளியில் சுற்றுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் சென்றடைய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் கிராமங்கள்தோறும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது 268 வாகனங்கள் மூலம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு காய்கறிகள் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முதல் ரேசன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தற்போது தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. எனவே, பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். கொரோனோ ெதாற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: