11 கட்ட பேச்சும் தோல்வி மாற்றுவழிகளை தெரிவித்தால் மட்டுமே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நிபந்தனை

புதுடெல்லி:  வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் அதற்கான மாற்று வழிகள் என்ன என்பது குறித்து விவசாயிகள் தெரிவித்தால் தான் பேச்சுவார்த்தையை தொடங்க முடியும்  என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு  பல்வேறு மாநிலங்களை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லி எல்லையில் அவர்கள் கடந்த நவம்பர் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வருகிற 25ம் தேதியுடன் விவசாயிகள் போராட்டம் தொடங்கி 6 மாத காலமாகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. இதில் விவசாயிகளின்  கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். 25ம்  தேதிக்குள்  மத்திய அரசிடம் இருந்து உரிய பதில் வரவில்லை என்றால் 26ம் தேதி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

விவசாயிகளின் கடிதத்தை தொடர்ந்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று முன்தினம்  மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், “விவசாய சங்கங்கள் அரசு வழங்கும் சலுகைகளுக்கு ஆதரவு தர வேண்டும் அல்லது சட்டங்களை ரத்து செய்வதற்கு பதிலான  மாற்று திட்டம் குறித்து   தெரிவிக்க வேண்டும்.  விவசாயிகள் இதுவரை மாற்றுவழி என்ன என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சட்டங்களை ரத்து செய்தால் அதற்கான  மாற்று வழிகள் குறித்து விவசாயிகள் தெரிவித்தால் மட்டும்தான் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்” என்றார்.

Related Stories: