செயற்கையாக விலைவாசியை ஏற்றுவதா? விக்கிரமராஜா கடும் கண்டனம்

சென்னை: செயற்கையாக விலைவாசி ஏற்றத்துக்கு விக்கிரமராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் நலன் மட்டுமே அல்லாது பொதுமக்கள் நலனிலும் அக்கறைகொண்ட அமைப்பு என்பதை நிரூபிக்கும் விதமாக, ஒருநாள் மட்டுமே கடைகள் இயங்கும் என்பதற்கு மாற்றாக,  இரண்டு நாளாக முழுமையாக கடைகள் திறந்திருக்கும் என்பதை முதல்வர் அறிவிக்க வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, 2 நாட்கள் முழுமையாக அனைத்து கடைகளும் இயங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும், காய்கறி, பழம், போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி ஊரடங்கு நாட்களிலும் கிடைத்திட, நேரடி விநியோகம் செய்திட சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக இயங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காய்கறி, பழங்களை வாகனங்களில் நேரடியாக கொண்டுசென்று, அந்தந்த பகுதிகளிலேயே விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு சில கருப்பாடுகள் செயற்கையான விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி வருவதாக வரும் தகவல்களை அடுத்து, அதுபோன்ற கருங்காலிகளை பேரமைப்பு வன்மையாக எதிர்ப்பதோடு, மக்களுக்கு துரோகம் செய்யும் அதுபோன்ற நபர்களை வணிகம் செய்யும் நிலையிலிருந்து பேரமைப்பு கட்டாயம் நீக்கிவிடக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதை மிகவும் பணிவோடு அனைத்து வணிகர்களுக்கும் இக்கோரிக்கையின் மூலம் வலியுறுத்தப்படுகின்றது. விலைவாசி உயர்வு என்ற பேச்சுக்கே தமிழகத்தில் இடமிருக்கக்கூடாது என்பதை தார்மீக தர்ம சிந்தனையாக அனைத்து வணிகர்களும் மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: