உலக சுகாதார நிறுவன அங்கீகாரம் இல்லாததால் கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வெளிநாடு செல்வதில் சிக்கலாகுமா?: கிளம்பியது புது பிரச்னை

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாததால் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடு செல்லும் போது சிக்கலாகுமா என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தி உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்பதில்  அனைத்து நாடுகளும் உறுதியாக உள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற கொள்கையை பல நாடுகள் வகுக்க உள்ளன.

 

இந்நிலையில், இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு வெளிநாடு பயணத்தின் போது சிக்கல் ஏற்படுமா என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. வெளிநாடுகளைப் பொறுத்த வரையிலும், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த  தடுப்பூசி அல்லது அந்தந்த நாட்டு அரசுகள் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதித்த தடுப்பூசியை போட்டிருந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டவர்களாக கருத்தில் கொள்ளும். அப்படிபார்க்கையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழை காட்டினாலும் கூட அதை உலக நாடுகள் ஏற்காது என்றே கூறப்படுகிறது.

இது குறித்து டிராவல் ஏஜென்டுகள் கூறுகையில், ‘‘உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை போட்டிருந்தாலும் அவர்களை தடுப்பூசி போடாதவர்களாகவே உலக நாடுகள் கருதும். எனவே இந்த விஷயத்தில் ஆரம்பகட்ட  நிலையில் சிக்கல்கள் ஏற்படுவது நிச்சயம்’’ என்கின்றனர். கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய வழிகாட்டு அறிக்கைகள், பாரத்  பயோடெக் நிறுவனம் அனுமதிக்காக சமர்பித்ததாகவும், இன்னும் கூடுதல் தகவல்கள் அந்நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றன.

அடுத்த மாதம் உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் கூடுதல் தகவல்களை அளிக்க உள்ளது. அதன் பிறகு அங்கீகாரம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.  எனவே இந்த விஷயத்தில் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 நாடுகள் அனுமதி

கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க 14 நாடுகள் அனுமதி தந்துள்ளன. அவை, இந்தியா, ஈரான், ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, கவுதமாலா, கயானா, மொரீசியஸ், மெக்சிகோ, மியான்மர், நேபாளம், நிகாராகுவா,  பராகுவே, பிலிப்பைன்ஸ், வெனிசுலா ஆகியவை ஆகும். சில உற்பத்தி விதிமுறைகள் ஒத்துவராததால் பிரேசில் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு கோவாக்சினுக்கு அந்நாட்டில் அனுமதி தர மறுத்து விட்டது. இதுபோன்ற நாடுகள் கோவாக்சின்  தடுப்பூசி போட்டவர்களை எவ்வாறு அனுமதிக்கும் என்பதும் கேள்விக்குறியே.

அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகள்

உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகள்:

* கோவிஷீல்டு

* மாடர்னா

* பைசர்

* அஸ்ட்ரஜெனிகா

* ஜான்சன்

* சினோபார்ம்

இவை தவிர கோவாக்சின் போல பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் உலக சுகாதார நிறுவனம் இதுவரை அங்கீகாரம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு பதில்

மத்திய சுகாதார இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ‘‘தடுப்பூசி போட்டவர்களை மட்டும் அனுமதிப்பது தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ஒருமித்த முடிவு ஏற்பட்டதும் நாங்கள் உரிய நடவடிக்கை  எடுப்போம். தற்போதைய நிலையில், உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலில், பிற நாடுகளுக்கு செல்பவர்கள் கொரோனா நெகடிவ் என்ற பரிசோதனை ரிப்போர்ட் வைத்திருந்தால் மட்டும் போதுமானது’’ என்றார்.

Related Stories: