கொரோனா பாதித்து உயிரிழந்த வக்கீல்கள், குமாஸ்தாக்கள் குடும்பத்திற்கு இழப்பீடு: முதல்வருக்கு பார்கவுன்சில் கோரிக்கை

சென்னை: கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த வக்கீல்கள் மற்றும் வக்கீல் குமாஸ்தாக்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பியுள்ள கோரிக்கை மனு:  கொரோனா தொற்று காரணமாக வக்கீல்களும், வக்கீல் குமாஸ்தாக்களும் நீதிமன்றங்களுக்கு செல்லமுடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு 200க்கும் மேற்பட்ட வக்கீல்களும், குமாஸ்தாக்களும் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். தமிழ்நாடு பார்கவுன்சில் நல நிதியிலிருந்து  வக்கீல்களுக்கு உதவி செய்யப்படுகிறது. ஆனால், இன்னும் ஏராளமான வக்கீல்கள் இந்த திட்டத்தில் இணையவில்லை. அதனால், அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள்.

 எனவே, மக்கள் நலன் காக்கும் தமிழக அரசு கொரோனா பாதித்து உயிரிழந்த வக்கீல்கள் மற்றும் குமாஸ்தாக்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வக்கீல்கள் மற்றும் குமாஸ்தாக்களின்  குடும்பத்தினருக்கு உரிய மருத்துவ உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: