120 நாடுகளுக்கு தடுப்பூசி ‘சிரிஞ்சு’ தயாரித்து சப்ளை செய்தும்... இந்திய மருத்துவ உபகரண தொழிலை நசுக்கும் சர்வதேச ‘லாபி’ - கொரோனா காலத்தில் மலிவான, தரமற்ற பொருட்கள் இறக்குமதி

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து 120 நாடுகளுக்கு தடுப்பூசி ‘சிரிஞ்சு’களை சப்ளை செய்தும், இந்திய மருத்துவ உபகரண தொழிலில் சர்வதோ ‘லாபி’ இருப்பதால், மலிவான மற்றும் தரமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு முழுவதும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து பல மாநிலங்கள் ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தடுப்பூசியை அதிகளவில் போட்டால் தான், தொற்று பரவலில் இருந்து தப்ப முடியும் என்று நிபுணர்கள் கூறி வருவதால், மாநிலங்கள் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.

தடுப்பூசிக்கான மருந்துகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொள்முதல் செய்தாலும் கூட, மருந்தை செலுத்த பயன்படுத்தப்படும் ஊசிகளின் (சிரிஞ்சு) உற்பத்தி மற்றும் தேவையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுகுறித்து, இந்திய மருத்துவ உபகரணங்களின் தொழில்துறை சங்கத்தின் நிறுவனர் மற்றும் இந்துஸ்தான் மருத்துவ உபகரணங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் நாத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்தே, ‘சிரிஞ்சு’ உற்பத்திக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம். தடுப்பூசி போடும் பணி தொடங்கும் நேரத்தில் ‘சிரிஞ்சு’க்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்பதால், ‘சிரிஞ்சு’களை சேமிப்பது மற்றும் இருப்பு வைப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம்.

அதனையடுத்து மத்திய அரசு டிசம்பரில் இருந்து சிரிஞ்சிகளை வாங்கத் தொடங்கியது. இப்போது ஆண்டுக்கு 80 கோடி சிரிஞ்சுகளை உற்பத்தி செய்யும் திறனை எட்டியுள்ளோம். அதே கடந்தாண்டு 50 கோடியாக இருந்தது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் 100 கோடி இலக்கை எட்டுவோம். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை பெறுவதில், மற்ற நாடுகளையே இந்தியா சார்ந்துள்ளது. மூலப்பொருட்கள் மட்டுமின்றி வென்டிலேட்டர்கள், பிபிஇ கருவிகள், ஆக்ஸிமீட்டர்கள் போன்றவற்றையும் வாங்குகிறோம். மலிவான பொருட்களை இறக்குமதி செய்வதும், 0% அல்லது 7% இறக்குமதி வரியை விதிப்பதன் மூலம் நோயாளிகளுக்கு உதவ முடியும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.

ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம் இந்திய வர்த்தகம் இறக்குமதியை நோக்கிச் செல்லும். இந்தியாவில் மருத்துவ உபகரண தயாரிப்பு தொழில்கள் இருக்காது. தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் மொபைல் போன் தயாரிப்புக்கு மத்திய அரசு சலுகை வழங்குவது போல், மருத்துவ உபகரண தயாரிப்புக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் இறக்குமதி கொள்கை காரணமாக, மலிவான விலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ெபாருட்களையே நாம் நம்பியிருக்கிறோம். ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தன்னம்பிக்கை இந்தியா’ திட்டங்களில் மருத்துவ உபகரண பொருட்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். இக்கட்டான இந்த நேரத்தில், 85 முதல் 90% மருத்துவ உபகரணங்கள் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

எங்களது முக்கியமான கோரிக்கை என்னனென்றால், மருத்துவ உபகரணங்களின் இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும். ‘செகண்ட் கேன்ட்’ (ஏற்கனவே பயன்படுத்தியது) உபகரணங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புக்கான தனி உபகரண சட்டம் தேவை. கள்ளச்சந்தை மார்க்கெட்டை கட்டுப்படுத்த, விலை நிர்ணயத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதன் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். ஆனால், இறக்குமதியாளரின் ‘லாபி’ இந்திய மருத்துவ உபகரண தயாரிப்பாளர்களைவிட வலுவானது என்பதால், எங்களது கோரிக்கைகள் எடுபடவில்லை. அதேபோல், மருத்துவர்களின் ‘லாபி’யும் வலுவாக உள்ளது. பெரும்பாலும் இறக்குமதியாளர்களாக இருப்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பொருட்களை வாங்குகின்றனர்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் சிரிஞ்ச்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேேநரம், உள்நாட்டு மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், கடந்தாண்டை காட்டிலும் நான்கு மடங்கு உபகரண உற்பத்தியை அதிகரித்துள்ளோம். இதில் வேடிக்கை என்னவென்றால், தற்போதைய சூழ்நிலையில் மருத்துவ உபகரணங்கள் எங்களிடம் பற்றாக்குறையாக இருப்பதாக சில மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில், நாங்கள் (மருத்துவர்கள்) எதிர்பார்க்கும் உபகரணங்களை எவரும் தயாரிக்கவில்லை என்கின்றனர். அப்படியே நாங்கள் தயாரித்து சந்தைக்கு கொண்டு வரும்போது, அதனை யாரும் வாங்குவதில்லை. எங்களது விலை நிர்ணயத்தை காட்டிலும் மலிவான விலையில் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டால், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். கிட்டதிட்ட 120 நாடுகளுக்கு நெருக்கடியான இந்த நேரத்தில் இந்தியாதான் தடுப்பூசிக்கான சிரிஞ்சுகளை சப்ளை செய்கிறது. சில நாடுகளுடனான எங்களது ஒப்பந்தம், கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே தொடர்கிறது. அதேநேரம், உள்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே வெளிநாடுகளுக்கு ஆர்டர்களை வழங்குகிறோம்’ என்றார்.

Related Stories: