கரிசல் குயில் கி.ரா. மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கரிசல் குயில் கி.ரா. மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். மூத்த தமிழ் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (99), ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியுள்ளார். 1923ம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்த இவர் ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற  நாவலுக்காக 1991ம்  ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றார். தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டை அரசு குடியிருப்பில் வசித்து வந்த கி.ராஜநாராயணன், தமிழக அரசின் விருது மற்றும் கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும்,  பாராட்டையும் பெற்றுள்ளார்.

பள்ளியில் படிக்காத இவர் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி கணவதி கடந்த 2019ம் ஆண்டில் இறந்துவிட்டார். திவாகர், பிரபாகர் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கி.ராஜநாராயணன் லாஸ்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு கவர்னர் தமிழிசை, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,  திமுக தெற்கு அமைப்பாளர் சிவா, வடக்கு அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார், அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். புதுவை முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 பின்னர் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் அவரது உடல் சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது புதுச்சேரி அரசு சார்பில் அவரது உடலுக்கு போலீஸ்  மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இன்று இடைச்செவல் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கி.ரா என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்பெறும் கி.ராஜநாராயணன் மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம். தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள்  ஒன்றை இழந்து தேம்புகிறாள். யார் ஆறுதல் சொல்வார்? இந்த மண் உள்ளவரை; அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை; ஏன், தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும்! அந்தோ! அந்தக் கரிசல் குயில் கூவுவதை நிறுத்திக் கொண்டதே!. அவர் மறையவில்லை; எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார்.

நம் உயிரில் கலந்து வாழ்கிறார். வாழ்க அவரது புகழ்! அவரது குடும்பத்தினருக்கும், சக படைப்பாளிகளுக்கும்,  வாசகர்களுக்கும், தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா.வின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன்  நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசு மரியாதை அளித்ததற்காக தமிழக மற்றும் புதுச்சேரி அரசுக்கு கி.ரா.வின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டியில் சிலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளை தந்தவர்; வட்டார வழக்கு  சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.    மறைந்த எழுத்தாளர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும்  வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள்-படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.  கரிசல் இலக்கியத்தை  உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

எழுத்தாளரின் உறவினரான வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில், எங்கள் கரிசல் மண்ணின் இலக்கிய பிதாமகன் கி.ராஜநாராயணன் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை மற்றும் கோவில்பட்டி  நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்ற தங்கள் அறிவிப்பால் எங்கள் மனம் நெகிழ்ச்சியடைகிறது. எதிர்பாராமல் இந்த அறிவிப்புகளை தங்களே முன்னெடுத்து உத்தரவிட்டதற்கு கி.ராஜநாராயணன் குடும்பத்தார்களில் ஒரு உறுப்பினராக  இருக்கும் நானும் அவரது மகன்கள் ஆர்.திவாகரன், ஆர்.பிரபாகரன்  மற்றும் கரிசல் வட்டார மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். கரிசல் வட்டாரமான விருதுநகர், தூத்துக்குடி வடக்குப்பகுதி, சங்கரன் கோவில்,  வாசுதேவநல்லூர் உள்ளடக்கிய கரிசல் மண்ணின் மக்களுக்கு இது வரலாற்று அறிவிப்பாக திகழும் என்று கூறியுள்ளார்.

Related Stories: