மருத்துவமனைகள் முன்பு நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க வடசென்னையில் கோவிட் சென்டர்கள்: பொதுமக்கள் நிம்மதி

பெரம்பூர்: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையை பொறுத்தவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் கொரோனா தொற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, தொற்றின் பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது என கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாள்தோறும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகள் வெளியே ஆம்புலன்சில் நோயாளிகள் காத்துக்கிடக்க வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளை தவிர்த்து பல இடங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது.

அவ்வாறு பரிசோதனை செய்து நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமா அல்லது கோவிட் சென்டர்களில் அனுமதிக்க வேண்டுமா அல்லது வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டுமா என்பதை கண்டறிய சென்னையில் பல்வேறு சென்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் ஸ்டான்லி மருத்துவமனையில் குவிய தொடங்கினர். இதனால் மருத்துவமனை வெளியே பல மணி நேரம் நோயாளிகள் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில், திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கு  சொந்தமான குடியிருப்பில் 11 தளங்களில் 1920 பேர் அனுமதிக்கக்கூடிய அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கேயே எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை செய்து, அவர்களுக்கு அதிக பாதிப்பு இருப்பின் அவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். குறைவான பாதிப்பு இருப்பவர்களுக்கு வீட்டில் உரிய வசதியிருந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.

அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத நபர்களை இங்கேயே செயல்படும் கோவிட் சென்டரில் அனுமதித்து அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் செய்து தரப்படுகிறது. இதனால் வடசென்னை மக்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனை வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இதேபோல், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் செயல்படும் சித்த மருத்துவ சென்டரிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து எக்ஸ்ரே மற்றும் இரத்த பரிசோதனை உள்ளிட்டவை அங்கேயே எடுக்கப்படுகின்றன. மேலும், கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனை மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இதுவும் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வட சென்னையில் இருந்து அதிகப்படியான மக்கள் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து இங்கேயே சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: