சரக்கு லாரிகளுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய உரிமையாளர்கள் கோரிக்கை

சேலம்: தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு உத்தரவால், 30 சதவீத லாரிகள் மட்டுமே  அத்தியாவசிய பொருட்கள் பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகிறது. நான்கு லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன இயக்கத்திற்காக காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டு வரியை அபராதமின்றி நடப்பு மாதம் 14ம்தேதிக்குள் செலுத்தியிருக்கவேண்டும். ஆனால், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டு வரியை அபராதமின்றி செலுத்த ஜூன் 30ம் தேதி வரை அரசு காலநீட்டிப்பு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

 இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், ‘‘ஊரடங்கு காரணமாக லாரிகள் இயங்கவில்லை. இருப்பினும் காலாண்டு வரியை அபராதமின்றி செலுத்த ஜூன் 30ம் தேதி வரை அவகாசம்  வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கொரோனா 2வது அலையால் லாரி தொழில் முழுவதும் முடங்கியுள்ளது. இதனால், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலாண்டு வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

>