இ-பதிவு முறை அமலுக்கு வந்தது குமரியில் இருந்து கேரளா செல்வோர் அலைக்கழிப்பு: குறிப்பிட்ட மருத்துவமனை நெகட்டிவ் சான்றிதழ் கேட்கும் கேரள போலீசார்

நாகர்கோவில்:  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கவும், மாவட்டம் விட்டு பிற மாவட்டம் செல்வோருக்கும் இ-பதிவு நடைமுறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து குமரி - கேரள எல்லை பகுதிகளான ஆரல்வாய்மொழி, களியக்காவிளை பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை பகுதியை கடந்து வருகின்ற வாகனங்களை போலீசார் ஆய்வு செய்து இ-பதிவு சான்றிதழை சரிபார்க்கிறனர். அதே வேளையில் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தமிழக வாகனங்களை இஞ்சிவிளை சோதனைசாவடியில் போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.

பயணிகளிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை பெயரை கூறி அங்கு சென்று நெகட்டிவ் சான்றிதழ் பெற்று வாருங்கள் என்று கூறி வாகனங்களை திருப்பி அனுப்புவதாகவும் புகார் எழுந்துள்ளது. அங்கு நெகட்டிவ் சான்றிதழ் வழங்க ₹1000 வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் அரசு மருத்துவமனையில் இருந்து பெறப்படுகின்ற நெகட்டிவ் சான்றிதழை போலீசார் ஏற்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் குமரி - கேரள எல்லை பகுதியில் கேரளா செல்ல விரும்பும் பயணிகள், வாகனங்கள் தடுக்கப்பட்டு அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்ற நிலையில் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கேரள அதிகாரிகளிடம் பேசி க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>