நாரதா வழக்கில் மேற்குவங்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததால் 2 அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்தில் முதல்வர் மம்தா போராட்டம்

கொல்கத்தா: நாரதா வழக்கில் மேற்குவங்க ஆளுநரின் ஒப்புதலை பெற்று, திரிணாமுல் கட்சியின் 2 அமைச்சர்கள், எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் என, 4 பேரை சிபிஐ கைது செய்தது. இவ்விவகாரத்தில் சிபிஐ அலுவலகம் வந்த மம்தா பானர்ஜி, ‘முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள்’ என்று ஆவேசமாக கூறினார். மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 3வது முறையாக மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். மத்திய பாஜ அரசுக்கும், மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும் தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் ரீதியாக மோதல்கள் இருந்து வருகின்றன. தற்போது மம்தா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால், மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன. தேர்தல் முடிவுக்கு பின்பு நடந்த வன்முறை சம்பவங்களில், 16 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர், நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அவருக்கு எதிராக ‘கோபேக் கவர்னர்’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதால், அதிர்ச்சியடைந்த ஆளுநர் ஜெகதீப் தங்கர், தன்னுடைய காரில் இருந்து இறங்கி, மாநில போலீசாரையும், சட்டஒழுங்கு குறித்தும் கடிந்து கொண்டார். முன்னதாக,  ‘நாரதா வீடியோ டேப்’  விவகாரத்தில் திரிணாமுல் கட்சிச் சேர்ந்த பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன்  சாட்டர்ஜி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து இருந்தது. இவர்கள் 4  பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, சமீபத்தில் அம்மாநில ஆளுநர் ெஜகதீப்  தங்கரிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல்  அளித்திருந்தார். அதையடுத்து, நேற்று மேற்குவங்க மாநில அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுடன் மம்தா பானர்ஜியும் கொல்கத்தாவிலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றார்.

அப்போது அமைச்சர் பிர்ஹத் ஹாக்கீம், ‘நாரதா வழக்கில் சிபிஐ எங்களை கைது  செய்துள்ளது. விசாரணை பற்றிய எந்த பயமும் எனக்கில்லை. நீதிமன்றம் மூலம்  இந்த வழக்கை எதிர்கொள்வோம். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.  நிச்சயம் நாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிப்போம். இந்த நடவடிக்கைக்குப்  பின்னால் பாஜக உள்ளது’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சிபிஐ அலுவலகத்தில் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகான விசாரணையில் அமைச்சர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் வெளியே வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, ‘எனது அமைச்சர்கள் உரிய நடைமுறை இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிந்தால் அதேபோன்று என்னையும் கைது செய்யுங்கள்’ என்று ஆவேசமாகக் கூறினார். மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்திற்கு வந்ததும், திரிணாமுல் கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர்.

அவர்கள், சிபிஐ அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டிருந்த மத்திய படை போலீசார் மீது கற்களை வீசினர். பெரும் பதற்றம் ஏற்பட்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 4 பேரை சிபிஐ கைது செய்திருப்பது அம்மாநில அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடம் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், மேற்குவங்க மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

முகுல்ராய், சுபேந்து நல்லவர்களா?

நாரதா விவகாரத்தில், முன்னாள் பாஜக தலைவர் சோவன் சட்டர்ஜியின் வீட்டில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இவர், நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலின் போது திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ேசர்ந்தார். இருப்பினும், சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட ‘சீட்’ கிடைக்காததால், அவர் பாஜகவிலிருந்து விலகினார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் பட்டியலில் உள்ள திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில்  இணைந்த முகுல் ராய் மற்றும் சுபேந்து அதிகாரி (மம்தாவை நந்திகிராமில் தோற்கடித்தவர்) மீது ஏன் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை முன்னறிவிப்பு  இல்லாமல் கைது செய்யது தவறு என்றும் திரிணாமுல் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

4 பேருக்கும் ஜாமீன்

இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 அமைச்சர்கள் உட்பட 4 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சிபிஐ சிறப்பு நீதிபதி அனுபம் முகர்ஜி முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார். இதைத் தொடர்ந்து 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: