பூதப்பாண்டியில் கனமழைக்கு வாழைகள் நாசம்; குமரியில் மேலும் 30 வீடுகள் இடிந்தன: பேச்சிப்பாறையில் தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மழை குறைந்துள்ள நிலையில் பேச்சிப்பாறையில் தண்ணீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. சூறைக்காற்றில் சிக்கி மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் உச்சநீர்மட்டத்தை எட்டிய நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

முதலில் 500 கன அடி திறக்கப்பட்ட நிலையில் பின்னர் இது படிப்படியாக 4242 கன அடி வரை அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் முதல் மழை குறைய தொடங்கியது. இன்று காலை முதல் மீண்டும் வெயிலடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக மேலும் 30 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒன்று, தோவாளையில் 3, கல்குளம் 3, திருவட்டார் 3, விளவங்கோடு 4, கிள்ளியூர் 15 வீடுகள் என்று மொத்தம் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. முதல்நாளில் 27 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருந்தனர்.

இன்று காலைவரை அதிகபட்சமாக புத்தன் அணை பகுதியில் 37 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் மழை குறைய தொடங்கிய நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 521 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்த நிலையில் மேலும் 234 கன அடி தண்ணீர் உபரியாக மறுகால் வழி வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 2400 கன அடியில் இருந்து வந்த தண்ணீர் வரத்து குறைந்து இன்று காலை 1404 கன அடியாக காணப்பட்டது. இதர அனைத்து அணைகளும் மூடப்பட்டுள்ளன. 4 நாள் மழைக்கு 0 மட்டத்தில் இருந்த முக்கடல் அணை 7.5 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5000 வாழைகள் நாசம்

பூதப்பாண்டியை அடுத்த அருமநல்லூர், சிறமடம், பூதப்பாண்டி, தெள்ளாந்தி, முக்கடல், சீதப்பால், சாட்டுப்புதூர் ஆகிய பகுதிகளில் பயிரிப்பட்டிருந்த சுமார் 5000 வாழைகள் கனமழைக்கு முறிந்து விழுந்தன. இவை அனைத்தும் குலை தள்ளிய வாழைகள் ஆகும். இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து விழுந்தது எங்களை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. கனமழையில் ஏற்பட்ட பாதிப்பு எங்களை கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. அரசு எங்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

அணைகளில் நீர்மட்டம்

சிற்றார்-1ல் 11.87 அடியும், சிற்றார்-2ல் 11.97 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.05 அடியாகும். பெருஞ்சாணியில் 62.30 அடியும், பொய்கையில் 16.80 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 33.14 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.

Related Stories:

>