முழு ஊரடங்கை மீறிய 1500 பேருக்கு அபராதம்-மட்டன், சிக்கன் வாங்க மக்கள் ஆர்வம்

கோவை : கோவை நகரில் முழு ஊரடங்கை முன்னிட்டு அனைத்து விதமான கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.‌ அத்தியாவசிய பணிகள் செய்யும் ஊழியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் மட்டும் வெளியே சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அனுமதியின்றி பலர் வெளியிடங்களில் சுற்றி வலம் வந்தனர். நகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது. ஆனால், மழையிலும் சிலர் வாகனங்களில் வலம் வந்தனர். வாகனங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி நோய் பரப்பும் வகையில் சுற்றிய சுமார் 1500 பேருக்கு அபராதம் விதித்தனர்.

18 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் சிலர் முழு ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் மட்டன், சிக்கன் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் சில இடங்களில் சுற்றி வந்தது தெரியவந்தது.‌

சில இடங்களில் இறைச்சிக் கடைகளை மூடி ஜன்னல் வழியாக மட்டன், சிக்கன் விற்பனை செய்து வந்தனர். இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் சிலர் நோய்தொற்று அபாயத்தை பற்றி கவலைப்படாமல் வெளியே சுற்றினர். சில இடங்களில் போலீசார் இறைச்சி வாங்க வந்த பொதுமக்களை நிறுத்தி ஒரு நாளாவது நூறு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்த ஒத்துழைப்பு தர மாட்டீர்களா? என கேட்டனர்.‌ இதேபோல், மதுபாட்டில்களை தேடியும் சிலர் வீட்டை விட்டு வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர்.‌ ரோந்து போலீசார் பொது இடங்களில் தேவையின்றி பலம் வந்தவர்களை விரட்டி விட்டனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,`கோவை நகரில் 99 சதவீதம் முழு ஊரடங்கை மக்கள் கடைபிடித்தனர். வெகு சிலரே ரோட்டுக்கு வந்துள்ளனர். கடைகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் அநாவசியமாக வெளியே வர வேண்டிய நிலை ஏற்படவில்லை. சிலர் மருத்துவ காரணங்களுக்காகவும், சிலர் மூடிய கடையில் ஏதாவது பொருட்கள் கிடைக்குமா?, இறைச்சிக் கடைகள் திறந்திருக்குமா? என தேடி வந்தனர்.

வாகனங்களில் வந்த பொதுமக்களை நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்து இருக்கிறோம்.‌ ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்பட்டால் நோய்த்தொற்று வெகுவாக குறையும். நகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஊரடங்கு குறித்த ஒலிபெருக்கி தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. நகரில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் ரோடுகள் முடக்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தால் பாதுகாப்பாக இருக்கும்,என்றனர்.

Related Stories: