ஒடிசாவில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் பணியை ஒருங்கிணைக்க 2 அதிகாரி நியமனம்

சென்னை: ஒடிசாவில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் அனுப்பும் பணியை ஒருங்கிணைக்க இரண்டு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதேபோல், ஆக்சிஜன் பற்றாக்குறையை  போக்கவும், ரெம்டெசிவிர், தடுப்பூசி ஆகியவற்றை தமிழகத்துக்கு ஒதுக்கவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசு கூடுதல்  ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, ஒடிசா மாநிலத்திலுள்ள கலிங்கா நகர், ரூர்கேலா ஆகிய இடங்களில் நாள் ஒன்றுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில், தற்போது 110 மெட்ரிக் டன் தமிழ்நாட்டில் பெறப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜனை  பெறுவதற்கு விமானங்கள் மூலம் டேங்கர்களை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி அங்கு ஆக்சிஜன் நிரப்பி பின்னர் அவை ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. இந்தநிலையில், இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக  தமிழகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ரூர்கேலா நகரின் ஒருங்கிணைப்பு பணிகளை கவனிக்க நிஷாந்த் கிருஷ்ணா, புவனேஸ்வர் மற்றும் கலிங்கா நகர் ஆகிய இடங்களில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை  கவனிக்க பெரியசாமி நிமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஒடிசாவில் இருந்தவாறு ஆக்சிஜன் அனுப்பும் பணியை மேற்கொள்ள உள்ளார்கள்.

Related Stories: