கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கவர்னர் பன்வாரிலால் 1 கோடி நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார்

சென்னை: தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 1 கோடி நிதி வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் பன்வாரிலால் அழைப்பின் பேரில் நேற்று மாலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் பணிக்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது சொந்த தொகையில் இருந்து ₹1 கோடியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். இதையடுத்து கொரோனா 2வது அலையை எதிர்கொள்ளவும், மனித உயிர்களை காப்பாற்றவும் மிகப்பெரிய அளவிலான ஏற்பாடுகள், நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு தோள் கொடுக்கும் வகையில் கவர்னர் 1 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

அப்போது தமிழக மக்கள் கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு மனிதநேயத்துடன் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன், கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: