அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கோயில் சொத்து, வருவாய் விவரம் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது: அறநிலையத்துறை ஆணையர் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு

சென்னை: கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வரும் வகையில் ஐந்து அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்தி ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 அம்ச செயல் திட்டம் ஒன்று கொண்டுவரப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் ஆன்லைன் மூலம் நிர்வாகம், சட்டப்பூர்வமான ஆவணங்களை மின்னணுவில் மாற்றம், கோயில் சொத்துக்களில் வருமானங்களை அதிகரித்தல்  உள்ளிட்ட 5 அம்ச செயல் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை. விரைவில் இத்துறையின் ஆன்லைன் மென்பொருள் அமல்படுத்தப்படுகிறது.

எனவே, அனைத்து அதிகாரிகளும் தங்களது அலுவலகங்களில் தொழில்நுட்ப வசதிகளில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அப்போது தான் இமாலய சாதனைகளை பெற முடியும். கள ஆய்வு செய்யும் அதிகாரிகள் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், அனைத்து அதிகாரிகளுக்கும் தேசிய தகவல் மையம் மூலம் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: